Tuesday, 5 May 2026

ஓய்வு கால நிதிக்கு பக்காவாக உதவும் திட்டம் - என்.பி.எஸ் (NPS)

இன்றைய உலகின் மருத்துவ முன்னேற்றமும், வாழ்நாள் பற்றிய விழிப்புணர்வும் மக்களின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்களின் வாழ்நாள் 60 வயதிற்கு மேல் நீடித்துள்ளது. இதனால் ஓய்வு காலம் என்பது ஒரு குறுகிய கால பயணத்திலிருந்து நீண்டகால பயணமாக மாறியுள்ளது.

இந்த சூழ்நிலையில் பலரும் ஓய்வு கால நிதி சம்பந்தமாக சிந்திப்பதை காண முடிகிறது. நம் ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட நிதி தொகுப்பை வைத்திருக்க வேண்டும் என மக்கள் உணர்ந்துள்ளனர். அந்த ஓய்வு கால நிதியை திரட்டுவது என்பது ஒரு சில நாட்களில் செய்யும் செயல் அல்ல. அது ஒரு நீண்ட பயணம். அந்த நீண்ட பயணத்தை சாத்தியமாக்கும் திட்டம் தான் என்.பி.எஸ் (NPS).

என்.பி.எஸ் உருவாக்கம்: 

இந்திய அரசாங்கத்தால் ஜனவரி 1, 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட என்.பி.எஸ் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டது, பிறகு அனைத்து மக்களின் ஓய்வு கால வருமானத்தை பெருக்குவதற்கும், அவர்களின் ஓய்வு கால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மே 1, 2009 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.  இந்த திட்டத்தை  நிர்வகிக்கும் பொறுப்பு அரசின் பி.எப்.ஆர்.டி.ஏ (PFRDA) என்னும் அமைப்பிடம் உள்ளது. 

இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்த முதலீட்டினை நீண்ட காலமாக சேமித்து, அதனை பல சந்தை சார்ந்த பலதரப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்து அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை மக்களுக்கு ஓய்வு கால நிதியாக வழங்குவதாகும்.

என்.பி.எஸ்-இன் முக்கியத்துவம்: 
  • இத்திட்டம் முதலீட்டாளர்களின் ஓய்வூதியத்திற்காக சேமிக்க உதவும் ஒரு சந்தை சார்ந்த  பங்களிப்பு திட்டமாகும். 
  • இத்திட்டம் எளிமையானது, விருப்பத்திற்குரியது மற்றும் மாற்றிக் கொள்ளக் கூடியது.
  • தனியார் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் ஊழியர்களுக்கு என்.பி.எஸ் திட்டத்தை ஏற்று செயல்படுத்தலாம்.
  • 18 முதல் 70 வயதுக்குட்பட்ட இந்தியாவின் அனைத்து குடிமக்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெற முடியும்.
  • வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இந்த திட்டத்தில் பங்கு பெறலாம்.
  • இந்த திட்டத்தின் குறைந்தபட்ச முதலீடு தொகை ₹500 மற்றும் குறைந்தபட்ச வருட முதலீடு ₹1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திட்டத்தின் கீழ் இயங்கும் எந்த கிளை திட்டத்திலும் அவரவர்களின் விருப்பத்தின் பெயரிலும் அல்லது ரிஸ்க் எடுக்கும் தன்மையை பொறுத்தும் முதலீடு செய்து கொள்ளலாம். 
  • பலதரப்பட்ட சொத்துக்களில் (பங்குச் சந்தை, நிறுவன கடன் பத்திரங்கள், அரசாங்க கடன் பத்திரங்கள் மற்றும் இதர சொத்து வகைகள்) பிரித்து முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் பரவலாக்கப்படுகிறது. 
  • முதலீட்டாளர்களின் ஓய்வூதிய வருமானத்தை அதிகரிப்பதற்கும், வரியை சேமிப்பதற்கும் எளிமையான வழிகளில் இத்திட்டம் ஒன்றாகும். 
  • முதலீடு செய்யும் தொகையில் அதிகபட்சமாக வருடத்திற்கு ₹2 லட்சம் வரை வருமான வரி விலக்கு பெற முடியும்.
  • இணையத்தின் வாயிலாக சுலபமாக என்.பி.எஸ் கணக்கை தொடங்க முடியும்.
  • என்.பி.எஸ் - இல் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. அதில் Tier 1 என்பது ஓய்வூதியத்திற்கான நிரந்தரக் கணக்கு, Tier 2 என்பது எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய சேமிப்புக் கணக்கு.
  • கணக்கு தொடங்கி மூன்று வருடங்களுக்குப்பிறகு, முதலீட்டாளர் செய்த சொந்த பங்களிப்பில் (Own Contribution) இருந்து அதிகபட்சமாக 25% வரை பகுதியாக திரும்பி பெறுதல் (Partial Withdrawal) செய்துகொள்ளலாம்.
  • முதலீட்டாளர் 60 வயதை கடந்த பின்னர் அவர்களின் முதலீட்டிலும் 60 விழுக்காடு முழுமையாக எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு வருமான வரி கிடையாது. அதேபோல மீதமுள்ள 40% முதலீட்டை மாதாந்திர வருமானம் தரும் விதத்தில் மட்டுமே மீண்டும் சேமிக்க முடியும். 

இத்திட்டத்தின் மூலம் ஒருவர் குறைந்த பணத்தை நீண்ட காலத்திற்கு தொடர்ச்சியாக சேமித்து, சந்தை வளர்ச்சியை ஒட்டிய வளர்ச்சியை பெறமுடிகிறது.  இத்திட்டம் படிக்காத பாமரனுக்கும், தங்களின் ஓய்வுக்காலத்தில் தேவையான பணத்தினை சேமிப்பதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இன்றே உங்கள் என்.பி.எஸ் கணக்கைத் தொடங்கி உங்கள் ஓய்வு காலத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 

உங்களின் நிம்மதியான மற்றும் பாதுகாப்பான ஓய்வுக்கால வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்!!!

(இந்த பதிவு குறித்த உங்கள் சந்தேகங்களையும் & கருத்துக்களையும் கமெண்ட் பகுதியில் பதிவிடுங்கள்)

No comments:

Post a Comment